கல்வியில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதால், போராட்டம் நடக்கும் இடத்தில் குழந்தைகளை படிக்க வைப்பதாக சொல்கிறார்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டம் எட்டாம் நாளை எட்டியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்றும், மத்திய அரசு இந்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றுவருகிறது.


முதல் முறையாக போராட்டக்களத்தில் இறங்கியுள்ள பெண்கள் பலரும், தங்களது குழந்தைகளுடன் ஒரு வார காலமாக வண்ணாரப்பேட்டை பென்சில் பாக்டரி பகுதியில் முகாமிட்டுள்ளனர். கடந்த வெள்ளியன்று போராட்டத்திற்கு வந்தவர்களில் பலர் வீடு திரும்பவில்லை.


பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளின் கல்வியில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதால், போராட்டம் நடக்கும் இடத்தில் குழந்தைகளை படிக்க வைப்பதாக சொல்கிறார்கள்


பிபிசி தமிழிடம் பேசிய ஆஸ்மா ரஹமதுல்லா(38) தனது மகன் முசம்மில்லை பரீட்சைக்கு தயார் செய்வதாக கூறினார். ''என் மகன் ஐசிஎஸ்சி பிரிவில் நான்காம் வகுப்பு படிக்கிறான். இதுவரை நடந்த பரீட்சைகளுக்கு வீட்டில் சொல்லிக்கொடுத்தேன். தற்போது நான் போராட்டத்தில் இருக்கிறேன். இந்த போராட்டம் அவன் எதிர்காலத்திற்கானது என்பதால், நான் இந்த களத்தில் இருந்து வீட்டுக்கு போக முடியாது. அவனது புத்தகங்களை கொண்டு வந்து இங்கே முடிந்தவரை சொல்லிக் கொடுக்கிறேன். அவனது பள்ளியில் தகவல் சொல்லிவிட்டேன். முதல் நான்கு நாட்கள் இவன் பள்ளிக்கு போகவில்லை. போராட்டம் முடியும்வரை இந்த களம்தான் எங்கள் வீடு,''என்கிறார் ஆஸ்மா.